பெயிண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 வாலிபர்கள் அதிரடி கைது

 

கள்ளக்குறிச்சி, ஜூலை 15: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அகரக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த பெஞ்மின் மகன் அந்தோணிசாமி (27), பெயிண்டர். இவருடன் சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் பாலகிருஷ்ணன் (23), ரோடுமாமாந்தூர் கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் நரசிம்மா (22), அதே கிராமத்தை சேர்ந்த ஐயனார் மகன் அசோக் (24), வாணியந்தல் கிராமத்தை சேர்ந்த தனசேகர் மகன் ஐயனார் (23) ஆகிய 4 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்தோணிசாமிக்கும் இவர்களது நண்பர்களுக்கும் ஏற்பட்ட மனவருத்தத்தால் அந்தோணிசாமி தனது நண்பர்களிடமிருந்து பிரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி கள்ளக்குறிச்சி டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் பாலகிருஷ்ணன், நரசிம்மா, அசோக், ஐயனார் ஆகியோர் டீ குடித்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அதே டீ கடையில் அந்தோணிசாமி டீ குடித்துவிட்டு பைக்கில் புறப்பட்டபோது பழைய நண்பர்களை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்தோணிசாமி தனது பைக்கை ஸ்டார்ட் செய்து ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் ஒன்று சேர்ந்து அந்தோணிசாமியிடம் கடும் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்தோணிசாமியை மிரட்டியதுடன் எங்களிடம் பகைச்சுக்காதே உன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி தனது வீட்டுக்கு சென்று உறவினர்களை அழைத்து கொண்டு ரோடுமாமாந்தூர் கிராமத்துக்கு சென்று பாலகிருஷ்ணன் மற்றும் நரசிம்மா, அசோக், ஐயனார் ஆகியோரை பதிலுக்கு தாக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்தோணிசாமி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தெரிகிறது. அப்போது அருகே உள்ள பகுதியில் நின்றிருந்த அந்தோணிசாமி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சத்தம் கேட்டு தனது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பு தீப்பிடித்து எரிந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாய், தம்பி ஆகியோரிடம் பத்திரமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார். பின்னர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து அந்தோணிசாமி, கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிந்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பாலகிருஷ்ணன், நரசிம்மா, அசோக், ஐயனார் ஆகிய 4 பேரும் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அந்தோணிசாமி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதும் உறுதியானது. இதையடுத்து பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரையும் கள்ளக்குறிச்சி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொடுவாள் பறிமுதல் செய்யப்பட்டது. முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு பெயிண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: