தேர்தல் விதிமுறைகளை காரணம் காண்பித்து மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பாதியில் தடுத்து நிறுத்திய போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற போட்டியாளர்கள்

திருமயம், மார்ச் 14: திருமயம் அருகே தேர்தல் விதிமுறைகளை காரணம் காண்பித்து மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பாதியிலேயே நிறுத்தினர். இதனால் ஏமாற்றத்துடன் போட்டியாளர்கள் சென்றனர்.திருமயம் அருகே உள்ள அரண்மனைபட்டியில் குறுந்துடைய அய்யனார் கோயில் சிவராத்திரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று காலை 6 மணிக்கு துவங்கியது. இது பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளாக நடத்த தயாரானது. மேலும் பந்தயத்தில் பங்கேற்க புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், அறந்தாங்கி, திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரியமாடு பிரிவில் 13 ஜோடி மாடுகள், சிறிய மாடு பிரிவில் 39 ஜோடி மாடுகள் வந்திருந்தன.

முதன்முதலில் பெரியமாடு பிரிவு பந்தயம் துவங்கியது. இதில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பந்தய முடிவில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் மலம்பட்டி காயத்ரி, 2ம் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் திணையாக்குடி சிவா, 3ம் பரிசை சாக்கோட்டை கோதையம்மாள், 4ம் பரிசு கொத்தரி சோலை ஆண்டவர் கோயில் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.இதைதொடர்ந்து சிறிய மாட்டுக்கான பந்தயத்தை நடத்த விழா கமிட்டியினர் தயாராகினர். அப்போது அங்கு வந்த திருமயம் இன்ஸ்பெக்டர் தமிழரசி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பந்தயத்தை நிறுத்துமாறு கேட்டு கொண்டார். இதைதொடர்ந்து போலீசாரிடம் பந்தயத்தில் பங்கேற்க வெகுதொலைவில் இருந்து மாட்டுக்காரர்கள் வந்திருக்கின்றனர்.

எனவே பந்தயத்தை நடத்த ஒரு மணி நேரம் அவகாசம் தருமாறு விழா கமிட்டியினர் கேட்டனர். இருந்தபோதிலும் போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அனுமதி தர மறுத்து தடையை மீறி பந்தயம் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் விழா கமிட்டியினர், பந்தய மாட்டு உரிமையாளர்கள் மற்றும் பந்தயம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

Related Stories: