பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி வழக்கு தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி.அரசகுமார் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் என்பவர் கடந்த ஜூன் மாதம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத கூட்டமைப்புகளின் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் சிலர் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு மற்றும் கட்டிட அனுமதி பெற்று தருவதாக ரூ.100 கோடி வரை வசூலித்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.

அந்த புகாரின்படி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, பி.டி.அரசகுமார் மாநிலம் முழுவதும் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து யாருக்கும் அங்கீகாரம் பெற்று தராமால் ஏமாற்றியது தெரியவந்தது.  அதைதொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பள்ளிகள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்திருந்தனர். அதன்படி இதுவரை 50 தனியார் பள்ளி நிர்வாகிகள் பி.டி.அரசகுமார் மீது புகார் அளித்துள்ளனர். மோசடி தொடர்பாக பி.டி.அரசகுமார் சங்க வங்கி கணக்கு என மொத்தம் 20க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

இந்நிலையில் தொடர் புகார்களை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன் தலைவர் பி.டி.அரசகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து மீண்டும் கைது செய்துள்ளனர்.

Related Stories: