விஜய்யின் குதிரை பேர அரசியல் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: தவெக அரசின் குதிரைபேர ஊழல் பற்றி திமுக சார்பில் ஆளுநரிடம் மீண்டும் புகார் அளிக்கபட்டது. விஜய்யின் குதிரை பேர அரசியல் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிடமும், சிபிஐயிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் விஜய் குதிரைபேர ஊழல் ஈடுபட்டு உள்ளார் என்பதை வைகோ அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஏற்கனவே கடந்த 4ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆதாரத்தோடு புகார் அளித்தோம். அதேபோல விஜயபாஸ்கர் வெளிப்படையாகவே செய்தியாளர் கூட்டத்திலே என்னை தவெகவில் வந்து சேரும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆகவேதான் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரும் சேர்ந்துவிட்டார்.

ஆக இதெல்லாம் குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதை சுட்டிக்காட்டி ஆளுநரிடத்தில் மீண்டும் ஒருமுறை திமுகவின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம். விஜய் பேசும்போது கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுகிறார். கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் ஆகிய இருவருமே நாங்கள் சாப்பிட்டுப் போட்ட இரண்டு இலை தான். அதை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளனர் என அதிமுகவினரே விமர்சித்து உள்ளனர்.

ஆகவே எச்சில் இலையை வைத்து ஒரு விழா நடத்துகிறார். அதில் ஏற்கனவே வெளியிட்ட கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணையை ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன் பிறகு வெளிடுவது போல ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளார். இந்த நாடகம் நடந்தது 10ம் தேதி ஆனால் 9ம் தேதியே அதற்கான அரசாணை போடப்பட்டுவிட்டது.

இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம், எவ்வளவு பெரிய நாடகம். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும். குதிரை பேர புகாரின் பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்.இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Related Stories: