பத்திரப்பதிவு துறையில் ‘வருகையில்லா ஆவணப்பதிவு’: ஆக. 17 முதல் நடைமுறைப்படுத்த திட்டம்

சென்னை: பத்திரப்பதிவு துறையில் ‘வருகையில்லா ஆவணப்பதிவு’ ஆகஸ்ட் 17ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்களின் வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனை பிரிவுகளின் முதல் விற்பனையை, வரும் 17-8-2026 முதல் கட்டாயமாக ‘வருகையில்லா ஆவணப்பதிவு’ முறையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மற்ற ஆவணப் பதிவுகளும் இந்த முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை குறித்து கட்டிட விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும், இணையவழி பதிவு முறையை செயல் விளக்க காட்சி மூலம் விளக்கவும் தினசரி இணையவழி பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: