சுதந்திர போராட்டத்தில் உணர்ச்சி பொங்க உச்சரித்த ‘வந்தே மாதரம்’ சொல்லை வைத்து பாஜ, ஆர்எஸ்எஸ் மலிவான அரசியல் செய்கிறது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி

சென்னை: சுதந்திர போராட்டத்தில் உணர்ச்சி பொங்க உச்சரித்த ‘வந்தே மாதரம்’ சொல்லை வைத்து பாஜ, ஆர்எஸ்எஸ் மலிவான அரசியல் செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார்.  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், நேற்று சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அரசு விழாக்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்க வேண்டும் என்ற பாஜவின் நிலைப்பாடு, சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதும், அவர்களது வழிபாட்டு முறைகளில் இடையே ஒரு சங்கடத்தை ஏற்படுத்துவதுமே ஆர்எஸ்எஸ், பாஜவின் அடிப்படை கொள்கையாக உள்ளது. தேசியம், தேசப்பற்று ஆகியவற்றின் பெயரில் மக்களை அச்சுறுத்தி, தங்களது கருத்துகளை திணிப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது.

வந்தே மாதரம் என்ற சொல் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது அனைவரும் உணர்ச்சி பொங்க உச்சரித்த சொல். அந்த பாடலையும், தேசிய கீதத்தையும் காங்கிரஸ் எப்போதும் மதிக்கிறது. ஆனால் அதனை வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர், மலிவான அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. பாஜவும் ஆர்எஸ்எஸ்சும் மிகவும் மதிக்கத்தக்க வந்தே மாதரம் பாடலை வைத்து அரசியல் செய்வது, மிகவும் வருந்தத்தக்க ஒரு செயல். இதுகுறித்த காங்கிரஸ் நிலைப்பாட்டை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவிப்போம்.

தமிழகத்தில் குதிரை பேர ஊழல் நடைபெறுவதாக கூறப்படுவது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணமோ, பதவியோ வழங்கி அவர்களை இழுப்பதே குதிரை பேரம். அவ்வாறு ஏதும் நடந்திருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். ஆனால் இதுவரையில் அதேபோல் யாரும் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளித்ததாக தெரியவில்லை. ஒரே ஒருவர் மட்டும் ஒருமுறை புகார் அளித்தார்.

அதுவும் தனிப்பட்ட ஒருவர் மீது மட்டும் அளித்தார். அந்த புகார் என்ன ஆனது? அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று பார்த்தால், அதற்கான விடை கிடைக்கும். அவ்வாறு குதிரை பேரம் நடந்தால் காவல்துறையில் புகார் அளிக்காமல் ஆளுநரை சந்தித்து புகார் அளிப்பது சரியானது அல்ல. அதுபோன்ற அரசியல் நாடகம் நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல. தமிழக ஆளுநர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்படாமல் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. இது தமிழக மக்கள் நலனுக்கு எதிரானது.பாஜ மாநில தலைவர் அண்ணாமலை 2031ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார். அவர் நம்பிக்கையுடன் இருப்பது நல்லது தான். அவருக்கு எனது வாழ்த்துகள். உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடப் போவதாக வெளியான தகவல் தவறானவை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: