திமுக-அதிமுக கூட்டணிக்கு ராஜேந்திர பாலாஜி ஒருங்கிணைப்பாளராக இருப்பார் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினரே மறந்துவிட்டனர்: அரசு அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் அரசியல் பேச்சால் சர்ச்சை

சென்னை: திமுக-அதிமுக கூட்டணிக்கு ராஜேந்திரபாலாஜி ஒருங்கிணைப்பாளராக இருப்பார். எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினரே மறந்துவிட்டனர் என்று அரசு அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் அரசியல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதல்வர் பதவியில் உள்ள விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்ணிய குறைவாக பேசக்கூடாது. மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தமிழகத்தில் தவெக ஆட்சி இருக்காது என தெரிவித்தார்.

இந்தநிலையில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை நகருக்குள் நடக்கும் மின்வெட்டு கேபிள் வயர் துண்டிக்கப்படுவதால் நடக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி ஊழியர்களால் நடக்கும் பணிகளால் மின்வெட்டு ஏற்படுகிறது. பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. புகார்கள் வந்தால் உடனடியாக சரி செய்கிறோம். கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை அதிகரிக்கிறது.

அதனால் மின் தேவையும் அதிகரித்துள்ளதால் சிறிய, சிறிய இடையூறுதான் இருக்கிறது. தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனும், ராஜேந்திர பாலாஜியும் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்கள். அதிமுகவினர் என்ன பேசுவதென தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். தற்போது வரை ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தான் திமுக உள்ளது. தவெக எம்எல்ஏக்களை வாங்குவதற்காகவே திமுக-அதிமுகவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி என்ற ஒருவர் அதிமுக பொதுச்செயலாளராக இருக்கிறாரா என்பதையே அதிமுகவினர் மறந்துவிட்டனர். தென் மாவட்டங்களில் அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலைதான் இருக்கிறது. பணம் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்குவது மட்டும் தான் குதிரை பேரம். சிலர் தலைமையை ஏற்க முடியாமல் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வருகிறார்கள் என்றால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுக தானே தவிர, தவெக அல்ல.

குதிரை பேரத்தில் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நபர்கள் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 80 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. ஒரு சில மாவட்டங்களில் நிலுவையில் உள்ளது. அது விரைவில் நிரப்பப்படும். அதேபோன்று விரைவில் துணைவேந்தர் நியமனமும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலாளர் அனில்மேஷ்ராம், மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். அரசு உயர் அதிகாரிகளை அருகில் வைத்துக் கொண்டு அமைச்சர் நிர்மல்குமார், அரசு அலுவலகமான மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: