சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இ.பரந்தாமன் நேற்று அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டம் செந்தாமரை குளத்தில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி சகோதரரை படுகொலை செய்திருக்கிறது விஜய் அரசு. 10ம் தேதி நல்லா இருந்த சபரிவர்மன், 13ம் தேதி மரணம் அடைந்ததாக காவல்துறை சொல்லியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக குடும்பத்தாரால் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போது சினிமா சூட்டிங்கை நமது முதல்வர் பெரம்பூரில் நடத்திக் கொண்டிருக்கிறார். டைவர்டிங் பாலிடிக்சை தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் இருக்கும் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார் என்ற செய்தி வந்த போது, நடந்த சம்பவம் கேள்விப்பட்டு அந்த குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார். இது காவல்துறை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, காவல்துறையினரே விசாரித்தால் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படும்.
எனவே, பொதுவான அமைப்பான சிபிஐக்கு தானாக முன்வந்து சிபிஐ விசாரணக்கு உத்தரவிட்டார். தானாக உத்தரவிட்ட அந்த எங்கள் முதல்வர் எங்கே?. ஆனால் இவற்றை பற்றி வாய் திறக்காமல் ஓடு, ஓடு என்று ஓடும் முதல்வர் எங்கே. தவெக அரசு பொறுப்பேற்ற 60 நாட்களில் இதுபோன்று 4 சம்பவங்கள் நடந்து இருக்கிறது. சாதாரணமாக 200 கிராம் குட்கா வைத்திருக்கக்கூடிய மாற்றுத்திறனாளியை இன்றைக்கு கைது செய்து சிறை சாலைக்கு அனுப்பி கொலை செய்திருக்கிறது. கொலை பழியை விஜய் அரசு மீது சுமத்துகிறோம்.
விஜய் அரசாங்கம் சிறைசாலையில் இருக்கின்ற அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றால், அவர்களை கைது செய்யவில்லை என்றால், ‘சாரி வேண்டாம், நீதி வேண்டும்’ என்று கேட்ட விஜய்யை பார்த்து நாங்கள் சொல்கிறோம். நீஙகள் ரீல்ஸ் முதல்வராக இருக்காமல், நீதியை வழங்குகின்ற, ரியல் முதல்வராக இருக்க வேண்டும். சினிமாவில் நீங்கள் ஹீரோவாக இருக்கலாம்.
ஆட்சி அதிகாரத்தில் நீங்கள் ஜீரோவாக இருக்கிறீங்க. நாட்டு மக்கள் கேட்கும் கேள்விக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து தைரியமாக பதில் சொல்லுங்க. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உரிய நீதியை வழங்குங்கள். கொலை வழக்காக பதியவிடாவிட்டால் திமுக சும்மா விடாது. சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம். நீதிமன்றம் மூலமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறுவதற்கு தயாராக இருக்கிறோம். இந்த அரசு பொறுபேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விஜய் மற்றவர்களை எல்லாம் நக்கல், நையாண்டி செய்வதை நிறுத்தி விட்டு ஆட்சி அதிகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
