அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையை கவுரவிக்கும் விதமாக ரூ.755 கோடியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையை கவுரவிக்கும் விதமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,725க்கு கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ம் தேதி (நேற்று) முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’.

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் முகமாக ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வடிவமைக்கப்பட்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது.

இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: