ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக அரசு கடைபிடிக்கக் கூடாது: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கடைபிடிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூலை 18ம் நாள் தமிழ்நாடு நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழ்மொழியின் பெருமை, தமிழ்நாட்டின் வரலாறு ஆகியவை குறித்து பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் பெருமைகளை பரப்புவதற்கான இத்தகைய பணிகள் வரவேற்கத் தக்கவை. ஆனால், இவற்றின் மூலம் வரலாற்றை திரிக்கும் முயற்சி தொடர்வதை அனுமதிக்க முடியாது. இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. அதை தொடர்ந்து 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

அதனடிப்படையில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் நவம்பர் ஒன்றாம் தேதியை தான் முறையே கர்நாடகம் நாள், கேரளம் நாள், ஆந்திரம் நாள், புதுச்சேரி நாள் என்று கொண்டாடி வருகின்றன. அதேபோல், நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றோரின் கோரிக்கையும் இதுவாகவே இருந்தது.

ஜூலை 18 என்பது தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்ட நாள் தான். ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்த நாளாகக் கொண்டாட முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: