சி.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஐசரி கணேஷ் தாக்கல் செய்த மனு வாபஸ்: உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு ஐசரி கணேசுக்கு சொந்தமான திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்க முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரசு மருத்துவர் பாலாஜிநாத் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவிற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை, விசாரணையில் வழக்கு தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை என கூறி வழக்கை முடித்துவைத்து விஜிலென்ஸ் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளது. இதனால் முடித்துவைக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவுசெய்த வழக்கை ரத்துசெய்ய வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் இதுவரை ஏற்றுக்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு இந்த வழக்கை தொடரலாம் என்று தெரிவித்தனர்.இதையடுத்து அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை வாபஸ் பெறுவதாக ஐசரி கணேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: