சென்னை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 15ல் தொடங்கி ஜூலை 13ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்களை முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான மாவட்ட தேர்வுக் குழு தேர்ந்தெடுத்து மாநில தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
