இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒன்டே: இந்தியா அபார வெற்றி

 

எட்பாஸ்டன்: இங்கிலாந் துக்கு எதிரான முதல் ஒருநாள் ேபாட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி எட்பாஸ்டனில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி ப்ரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்கத்தில் நிதானமாக ஆடிய இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 61ஐ எட்டியபோது ஜேக்கப் பேத்தல் 14 ரன்களில் குர்னூர் பிராரின் வேகத்தில் வீழ்த்தினார். பின்னர் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தது. துவக்க வீரரான பென் டக்கட் மட்டும் தாக்குப்பிடித்து 45 பந்துகளில் 43 ரன் எடுத்தார். இவரும் குர்னூர் பிரார் பந்தில் அவுட் ஆனார்.

கேப்டன் ப்ரூக் 1 ரன்னில் பும்ரா பந்தில் வெளியேறினார். பட்லர் 5, சாம் கரன் டக்-அவுட், வில் ஜேக்ஸ் 20 ரன்னில் ஆட்டமிழந்தனர். 107 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, ரூட் – லியாம் டாசன் ஜோடி சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில், டாசன் 68 ரன்களில் அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களும் வரிசையாக அக்சர் படேலின் சுழலில் வீழ்ந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ரூட் ஆட்டமிழக்காமல் 76 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 4, பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் தலா 2, பும்ரா, சிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்தியா 45.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories: