விம்பிள்டன் டென்னிஸ்; சின்னர் மீண்டும் சாம்பியன்

 

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான யானிக் சின்னர் (இத்தாலி) கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (2வது ரேங்க், 29 வயது) உடன் மோதிய சின்னர் (24 வயது) முதல் செட்டை 6-7 (7-9) என்ற கணக்கில் டை பிரேக்கரில் இழந்து பின்தங்கினார். இரு வீரர்களும் கடுமையாகப் போராடியதால் 2வது செட்டும் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் சின்னர் 7-6 (7-2) என வென்று பதிலடி கொடுக்க சம நிலை ஏற்பட்டது.
அதே வேகத்துடன் அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சின்னர் 6-7 (7-9), 7-6 (7-2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி விம்பிள்டன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 46 நிமிடத்துக்கு நடந்து. இந்த வெற்றி கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சின்னர் பெற்ற 100வது வெற்றியாகும். ஸ்வெரவ் உடன் மோதிய 15 போட்டிகளில் சின்னர் 11வது வெற்றியை பதிவு செய்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளார்.
அவர் இதுவரை விம்பிள்டனில் 2 (2025, 2026), ஆஸ்திரேலிய ஓபன் 2 (2024, 2025), யுஎஸ் ஓபன் 1 (2024) என மொத்தம் 5 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

Related Stories: