சென்னை: அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் பணம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. தகுதியான நபர்கள், உரிய ஆய்வுக்கு பின்பே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆடு திருடிய வழக்கு உள்ளவர் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பரவும் செய்தியில் உண்மை இல்லை. இதுவரை அரசு வழக்கறிஞர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை. அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100% நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெறுகிறது. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் யாராவது பணம் பெற்றால் புகார் தெரிவிக்கலாம். எங்காவது முறைகேடு நடைபெறுவதாக புகார் கொடுக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது கொடுக்கப்படும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் என்பது 6 மாத காலத்திற்கானது மட்டுமே. செயல்பாடுகளை பொறுத்து 6 மாதத்திற்கு பிறகே அரசு வழக்கறிஞர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதிகபட்சம் 800 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இன்னும் தேவைப்பட்டால் கூடுதலாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் அரசு தயாராக உள்ளது. இன்று அல்லது நாளைக்குள் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவியிடம் கேள்வி கேட்டது சர்ச்சையாகியுள்ளதே என கேட்டதற்கு, அமைச்சர் நிர்மல்குமார், ‘‘அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம் என முதல்வர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆய்வு நடத்தக்கூடாது. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்த கட்சி நபர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம்’’ என்று கூறினார்.
