சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்ற முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட 4 தேர்தல் வழக்குகளில் தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நான்கு வழக்குகளும் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்குகளும், நீதிபதி லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் வழக்குகள் 6 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். பெரம்பூர் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்குகளில் முதல்வர் விஜய், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோர் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வில்லிவாக்கம் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்குகளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோர் 3 வாரங்களில் பதிலளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
