ஆர்.என்.ரவியின் பாதையில் ஆளுநர் அர்லேகரும் பயணித்தால் தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பலைகளை சந்திக்க நேரிடும்: ஜவாஹிருல்லா எச்சரிக்கை

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ளது என்று கூறியிருப்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைச் சித்தாந்தங்களையே தலைகீழாக மாற்றும் வகையிலான தவறான விளக்கமாகும். இந்திய அரசியலமைப்பின் 163வது மற்றும் 164வது பிரிவுகள், மாநிலத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தலைமையிலான அமைச்சரவையிடமே இருப்பதை தெளிவாகக் கூறுகின்றன.

இந்திய அரசியலமைப்பின் 154வது பிரிவு, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதாகக் கூறினாலும், அந்த அதிகாரம் அரசியலமைப்பின் பிற விதிகளுக்கு உட்பட்டதாகும். அதாவது, அந்த அதிகாரம் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில்தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதை மறைத்து, ஆளுநருக்கு நேரடி நிர்வாக அதிகாரம் இருப்பதாக பேசுவது மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும். ஆளுநர் பதவி என்பது தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகத்திற்கு மாற்றான அதிகார மையம் அல்ல; அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் செயல்படும் அரசியல் சார்பற்ற அரசியலமைப்பு பதவியாகும்.

எனவே, ஆளுநருக்கு மாநில அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரம் இருப்பதாகக் கூறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும், இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும் நேர்மாறானது. அரசியலமைப்பை மதிப்பதாகக் கூறும் பாஜ முதலில் அரசியலமைப்பின் உண்மையான பொருளை அறிந்து பேச வேண்டும். அரசியலமைப்பை அரசியல் ஆதாயத்திற்காக திரித்துப் பேசுவது ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் ஆபத்தான முன்னுதாரணமாகும். ஆர்.என்.ரவியின் பாதையில் ஆளுநர் அர்லேகரும் பயணித்தால் தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பலைகளை சந்திக்க நேரிடும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: