உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கும் வேளையில் யுஜிசி விதிகள், ராமர் கோயில் ஊழலால் பாஜகவிற்கு பின்னடைவு: தோல்வி பயத்தில் தவிக்கும் ஒன்றிய அரசு

லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கும் வேளையில், ராமர் கோயில் காணிக்கை திருட்டு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு விவகாரங்களால் நிலைகுலைந்துள்ள பாஜக அரசு, மக்களின் கடும் கோபத்தில் இருந்து தப்பிக்க நாடகமாடி வருகிறது. உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் (2027) நெருங்கி வரும் வேளையில், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) சர்ச்சைக்குரிய புதிய விதிகள் ஆகியவை பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ஒன்றிய பாஜக தலைமை, மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியை மூடிமறைக்க அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது. லக்னோவில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், ராமர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழங்கிய காணிக்கை திருடப்பட்டது ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும் பாஜகவிற்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். தங்களின் தோல்விகளையும் நிர்வாகச் சீர்கேட்டையும் மறைப்பதற்காக, ‘தவறான நபர்களால் செய்யப்பட்ட தவறு இது’ என்று மழுப்பிய அவர், இந்த ஊழலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் எதிர்க்கட்சிகள் சதி செய்வதாகக் கூறி மலிவான அரசியலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் முன்னிலையில், ராமர் கோயில் திருட்டு மற்றும் யுஜிசி விவகாரங்களால் கட்சியின் இமேஜ் கடுமையாகச் சரிந்துள்ளதை பாஜக தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். குறிப்பாக, கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட யுஜிசி சமத்துவ விதிகள், கல்வி நிறுவனங்களில் பொதுப்பிரிவினருக்கு எதிரான அத்துமீறல்களுக்கு வழிவகுக்கும் என மாணவர்கள் மற்றும் சமூகத்தினரிடையே பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியதோடு, பாஜகவில் இருந்த பல முக்கிய உயர்சாதி நிர்வாகிகள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யக் காரணமாக அமைந்தது.

இதனால் நிலைகுலைந்த ஒன்றிய அரசு, தனது தவறான அறிவிப்புகளால் ஏற்பட்ட பாதிப்புகளை மறைக்க, ‘அறிவிப்பில் பயன்படுத்தப்பட்ட சில தவறான வார்த்தைகளே இந்த எதிர்மறை செய்திக்குக் காரணம்’ என்று மக்களின் காதில் பூ சுற்றும் வேலையைச் செய்து வருகிறது. மேலும், சமூகத்தில் பெரும் பிளவை ஏற்படுத்திவிடும் என்று கூறி உச்ச நீதிமன்றம் இந்த விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பது, ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் தோல்வியை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்வி பயத்தால் நடுங்கி வரும் பாஜகவின் இந்த சாயம் வெளுத்துள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ராமர் கோயில் ஊழலைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்துள்ள பாஜக, எதிர்க்கட்சிகள் மீது பாய்வதோடு, வரும் 2027ம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவசரமாக மாவட்டக் குழுக்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையைச் சிதைத்த ராமர் கோயில் திருட்டு விவகாரத்தில், பெயரளவிற்கு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, தங்களுக்கு நெருக்கமான முக்கிய குற்றவாளிகளைக் காப்பாற்ற பாஜக முயல்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, அதிகாரத்தைத் தக்கவைக்க வெறும் பொய்ப் பிரசாரங்களையும் வாக்குறுதிகளையும் மட்டுமே நம்பி இருக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, வரும் தேர்தலில் உத்தரப்பிரதேச மக்கள் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: