மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மேகதாது விவகாரத்தில் காவிரி டெல்டா விவசாயிகளின் அச்சத்தை போக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கக் கூடிய மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டி விடுமோ என்ற அச்சமும், பதற்றமும் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேகதாது அணையை தடுப்பதற்கான அரசியல், சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாதது கவலையளிக்கிறது. புதிய அரசு பதவியேற்ற பிறகு, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பயனற்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியதை தவிர வேறு எதையும் தமிழக அரசு செய்யவில்லை. இந்த அலட்சியம் காவிரி பாசன மாவட்டங்களின் உரிமைகளைக் காக்க உதவாது.

மேகதாது அணையை கட்டுவதற்காக கர்நாடக அரசு எவ்வளவு தீவிரமாக செயல்படுகிறதோ, அதை விட பல மடங்கு தீவிரமாக தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். அதன் மூலம் மேகதாது அணை தொடர்பாக காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை அரசு போக்க வேண்டும். மேலும் மேகதாது சிக்கலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அரசு உடனடியாக கூட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: