கோவையில் நடுரோட்டில் மாணவி பலாத்கார முயற்சி, வீடு சூறை தவெக நிர்வாகி உள்பட 3 பேர் கைது: 20 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

மதுக்கரை: கல்லூரி மாணவியை நடுரோட்டில் மறித்து பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தவெக நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 20 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மதுக்கரை அருகே வழுக்குப்பாறையை சேர்ந்தவர் தவெக நிர்வாகி மணியரசு (48). இவரது மகன் சூர்யா (25). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு தனது நண்பர் நரேந்திரன் (20) என்பவருடன் பைக்கில் வந்து நடுரோட்டில் காதல் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

காதலை ஏற்க மறுத்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கடுமையாக தாக்கி தப்பினார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை மாணவியின் தந்தை, சூர்யாவிடம் தட்டிக்கேட்டபோது கைகலப்பானது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க சென்றனர்.

தகவலறிந்து சூர்யா, நரேந்திரன் ஆகியோர் 20 பேருடன் வேனில் மாணவியின் வீட்டிற்கு பயங்கர ஆயுதங்களுடன் சென்று பைக், பீரோ, டிவி, கிரைண்டர், கட்டில் மற்றும் கண்ணில் தென்பட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். வீட்டில் இருந்த ரூ.1.5 லட்சம் பணம், 2 கம்மல்களையும் கொள்ளையடித்துள்ளனர். மேலும், மாணவி மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், அதே பகுதியில் பதுங்கி இருந்த தவெக நிர்வாகி மணியரசு, சூர்யாவின் தாய் மாமா சந்துரு மற்றும் சூரியாவின் பெரியப்பா மகன் பிரபு ஆகிய 3 பேரை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் 20 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

* நடந்தது என்ன? தவெக நிர்வாகி மகன் விளக்கம்
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படும் தவெக நிர்வாகியின் மகன் சூர்யா, தன்னை மாணவியின் தந்தை தாக்கியதில் காயமடைந்ததாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று சூர்யா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நானும், கல்லூரி மாணவியும் காதலித்த விஷயம் இருவர் வீட்டிலும் பிடிக்காததால், நாங்களாகவே பேசி காதலை முறித்துக் கொண்டோம்.

ஆனால், அந்தப் பெண் புதுபோன் வாங்கி எனக்குத் தினமும் போன் செய்து தொந்தரவு கொடுத்தார். இதற்கான போன் கால்கள், போட்டோ, ஆடியோ என அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. சம்பவத்தன்று பேருந்து நிறுத்தத்தில் அந்த பெண் என்னை வழிமறித்து, `என்னை ஏன் காதலிக்கவில்லை?’ என்று கேட்டார்.

எனக்கு இதில் விருப்பமில்லை என்று கூறிவிட்டு நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அவர் அழுது கொண்டே சென்றதால், அவரது தந்தை தவறாக நினைத்து, என் வீட்டிற்கு வந்து, பெரிய இரும்பு ராடால் என் தலையில் தாக்கினார். நான் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த என் தந்தை அவரது வீட்டிற்கு சென்று பைக்கை உடைத்துள்ளார். நகை, பணத்தை தூக்கி சென்றதாக எங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர்’’ என்றார்.

Related Stories: