நண்பரின் மனைவியுடன் நெருங்கி பழகிய தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை: 3 பேர் கைது

ஈரோடு: நண்பரின் மனைவியுடன் நெருங்கி பழகியதால் டாஸ்மாக் பாரில் கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு வெண்டிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் கோபிநாத் (26). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர் தற்போது ஈரோடு மணல்மேடு பகுதியில் அவரது மனைவி மஞ்சு மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கோபிநாத் வெண்டிபாளையம் காந்திஜி வீதியில் வசிக்கும் விவேக் (29) என்பவரது மனைவியுடன் பேசி பழகி வந்துள்ளார். இதையறிந்த விவேக், கோபிநாத்தை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், கோபிநாத் கடந்த 29ம் தேதி ஈரோடு அடுத்த சோலாரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றுள்ளார். இதையறிந்த விவேக் தனது நண்பர்களிடம் சொல்லி கோபிநாத்தை அடித்து உதைக்குமாறு கூறியுள்ளார். இதன்பேரில், விவேக்கின் நண்பர்களான சரவணன் (39), சதீஷ் (39) ஆகிய இருவரும், டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்த கோபிநாத்திடம், விவேக் மனைவியிடம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறாய்? எனக் கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும், தகாத வார்த்தைகள் பேசியதோடு, கோபிநாத்தை டாஸ்மாக் கடை அருகே உள்ள காலியிடத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். மேலும், கீழே கிடந்த கல்லை எடுத்தும் தலை, முகத்தில் தாக்கினர். அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

படுகாயம் அடைந்த கோபிநாத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கோபிநாத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சரவணன், சதீஷ் மற்றும் விவேக் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபிநாத் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கைதான 3 பேர் மீதும் கூடுதலாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, கோபிநாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: