ரூ.1 லட்சம் லஞ்சம் அறநிலையத்துறை இணை ஆணையர், புரோக்கர் கைது

தஞ்சாவூர்: கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தஞ்சை இந்து சமய அறநிலைத்துறை பெண் இணை ஆணையர், புரோக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரம் பகுதியில் வள்ளியம்மை நாதர் திருக்கோயில் புதுப்பிக்கும் பணியில் நாகப்பட்டினம் ஒப்பந்ததாரர் மதியழகன் ஈடுபட்டு வருகிறார்.

இப்பணிக்கு நிதி வழங்குவதற்காக அவரிடம், தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி (47) ரூ.1 லட்சம் லஞ்சத்தை, புரோக்கரான கிரிஜாவிடம் (53) கொடுக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து ஒப்பந்ததாரர் மதியழகன் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். போலீசார் ஆலோசனைப்படி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்ற மதியழகன், கிரிஜா மூலம் இணை ஆணையரிடம் ரசாயனம் தடவிய ரூ.1லட்சத்தை கொடுத்தபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Related Stories: