வீரவநல்லூர்: நெல்லை அருகே பழிக்குப்பழியாக 14 வருடங்களுக்கு பிறகு தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். பைக் மீது காரால் மோதியதில் அவருடன் வந்த 5 வயது மகனும் கொலை செய்யப்பட்டார். மற்றொரு மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த சித்திரைபுத்திரன் மகன் காளிமுத்து (40). விவசாய கூலித்தொழிலாளி.
இவர் நேற்று தனது இரு மகன்களான சின்னதுரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மாதுடையார்குளத்தில் உள்ள உறவினர் தோட்டத்தில் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் மகன்களுடன் பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வல்லத்துநம்பிகுளம் பகுதியில் வந்தபோது பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் திடீரென பைக் மீது காரை வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறி சாலை ஓரம் இருந்த புதர் பகுதியில் பைக் கவிழ்ந்தது.
காரில் இருந்து இறங்கிய கும்பல் காளிமுத்துவை சூழ்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் அவரது தலையை மட்டும் சுமார் 5 கிமீ தூரம் எடுத்து சென்று கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை மாநில நெடுஞ்சாலையில் வைத்து விட்டு தப்பினர். பைக் மீது காரால் மோதியதில் காளிமுத்துவின் 5 வயது மகன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தான்.
மற்றொரு மகன் சின்னதுரைக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடினான். தகவலறிந்த நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு, நெல்லை எஸ்பி விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்த சின்னத்துரையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காளிமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 15 வயது சிறுவன் கண் முன்பே தந்தை மற்றும் சகோதரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையை உலுக்கியுள்ளது.
இந்தக் கொலையின் அதிர்ச்சி பின்னணி வருமாறு: மூலச்சி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் நிலையில் கடந்த 2005ல் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் அரிவாளால் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் பல்வேறு கட்டங்களாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த மோதலின் உச்சமாக எதிர்த் தரப்பைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் என்பவரை தற்போது கொலையான காளிமுத்து தரப்பினர் கடந்த 2012ல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அவரது தலையை துண்டாக எடுத்து கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை பகுதியில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இரு தரப்பினருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்ததால், கடந்த 2021ம் ஆண்டு காவல்துறை சார்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் பகை நீடித்ததால் இக்கிராமத்தில் பலர் ஊரை விட்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். அதுபோல் காளிமுத்துவும் சில ஆண்டுகளாக வெளியூரில் வசித்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையறிந்த பெருமாள் பாண்டியன் தரப்பினர் காளிமுத்துவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு அவரை நோட்டமிட்டுள்ளனர். நேற்று அவர் பைக்கில் செல்வதை அறிந்து பின்தொடர்ந்து சென்று காரால் மோதி காளிமுத்துவை கொடூரமாக கொலை செய்ததோடு பெருமாள் பாண்டியனின் தலையை துண்டித்து கொன்றது போன்று காளிமுத்துவின் தலையையும் துண்டாக எடுத்து ஊருக்குள் வலம் வந்துள்ளனர்.
ஊரிலிருந்த பெண்களிடம் தலையை காண்பித்து பெருமாள் பாண்டியனை போன்று உங்கள் ஆளையும் கொலை செய்து விட்டோம் என தலையை காட்டியபடி சென்றுள்ளனர். அதன் பிறகே தலையை அதே கல்லிடைக்குறிச்சி கரம்பை பகுதியில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் காளிமுத்துவின் 5 வயது மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பழிக்குப் பழியாக நீடிக்கும் தீராத பகையில் தந்தை, அவரது 5 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க நெல்லை எஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அம்பை காவல் சரக பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
