சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பிரபல யூடியூபர் உள்பட 3 பேர் கைது: மேலும் 2 பேருக்கு தனிப்படை வலை

சென்னை: சட்டப்பேரைவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக செயல்பட வலியுறுத்தி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் படி, பிரபல யூடியூபரும், தேர்தல் கருத்துகணிப்பு நிபுணருமான திருநாவுக்கரசு உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, கடந்த 29ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் ஒன்று அளித்தார். அதில், சில தினங்களுக்கு முன்பு என்னை செல்போனில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்பவர், ஐபிடிஎஸ் என்ற கருத்து கணிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசினார்.

ஆனால் நான் வேறு பணியில் இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன். ஆனால் மீண்டும் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, நாங்கள் சொல்வது போல் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், எனக்கு விருப்பமில்லை.

இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறியபோது, நான் பேசியது குறித்து வெளியே தெரிவித்தால் எனது குடும்பத்தினர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டினார். எனவே, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் திருவல்லிக்கேணி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி திருவல்லிக்கேணி போலீசார் தவெக எம்எல்ஏ இளையராஜா புகாரின் மீது வழக்கு பதிவு செய்து, செல்போனில் பேசிய அரும்பாக்கத்தை சேர்ந்த பிரபல யூடியூபரும், தேர்தல் கருத்து கணிப்பு நடத்தும் திருநாவுக்கரசு மற்றும் திருச்சியை சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் கரூர் மாவட்ட தொழிலதிபர் ஒருவரை, கைது செய்யப்பட்ட நரேஷ் சென்னையில் சந்தித்து பேசியதும், அவர் அறிவுரைப்படியே திருநாவுக்கரசு தவெக எம்எல்ஏ இளையராஜாவை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.  இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கரூர் தொழிலதிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: