கோவையில் தொடரும் பயங்கரம்; நடுரோட்டில் கல்லூரி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்ய முயன்ற தவெக நிர்வாகி மகன்

* போலீசில் கூறியதால் வீட்டை சூறையாடிய 20 பேர் கும்பல்; 1.50 லட்சம் பணம், நகைகளை கொள்ளை அடித்து அட்டூழியம்: கஞ்சா, குடிபோதையில் பொதுமக்களையும் தாக்க முயற்சி

மதுக்கரை: கோவை அருகே கல்லூரி மாணவியை நடுரோட்டில் பலாத்காரம் செய்ய முயன்ற தவெக நிர்வாகி மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்டு பெற்றோர் போலீசில் புகார் செய்ய முயன்ற ஆத்திரத்தில் 20 பேருடன் சென்ற கும்பல் பெண்ணின் வீட்டை சூறையாடி பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவை மதுக்கரை அருகே ஒரு வியாபாரியின் 17 வயது மகள் கிணத்துக்கடவில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்தவர் தவெக நிர்வாகி மணியரசன் (43). இவரது மகன் சூர்யா (20). இவர் மாணவியிடம் தனது காதலை தெரிவித்தார். ஆனால் மாணவி அதனை ஏற்கவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து மாணவி வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது பைக்கில் தனது நண்பர் நரேன் (20) என்பவருடன் வந்த சூர்யா மாணவியை வழிமறித்து ‘ஏன் எங்களுடன் பேசாமல் செல்கிறாய்’ என்று கேட்டுள்ளனர். இதில் பயந்துபோன மாணவி அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார்.

இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் ஓடிச்சென்று மாணவியின் கையை பிடித்து இழுத்து கழுத்தை நெரித்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருந்து தப்பிய மாணவி வீட்டிற்கு சென்று நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சியடைந்த தந்தை இது குறித்து வாலிபர்களிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைகலப்பானது. இதில் வாலிபர் சூர்யா காயம் அடைந்தார். இதனால் அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றனர். அங்கு விசாரித்த போலீசார் நீங்கள் மதுக்கரை போலீசில் புகார் அளியுங்கள் என்று கூறினர். இதையடுத்து மாணவியின் பெற்றோர் மதுக்கரைக்கு சென்றனர். இந்த தகவல் சூர்யா, நரேன் ஆகியோருக்கு தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் தனது நண்பர்கள் 20 பேருடன் வேனில் பெண்ணின் வீட்டிற்கு கிரிக்கெட் பேட், ஸ்டம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றனர். அங்கிருந்த பைக்கை முதலில் அடித்து நொறுக்கினர்.

அதன் பின்னர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வாலிபர்களை தட்டிக்கேட்க முயன்றனர். ஆனால் அவர்கள் கஞ்சா மற்றும் குடிபோதையில் தாக்க வந்ததாக பொதுமக்கள் கூறினர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மதுக்கரை போலீசில் புகார் அளித்துள்ளனர். மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற இடத்தில் சிசிடிவி உள்ளதாக தெரிகிறது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறியதாவது: சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் உள்பட வீட்டை சூறையாடிய கும்பல் 20 பேரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள். இவர்களால் எங்கள் பகுதியில் நிம்மதியில்லாமல் இருக்கிறோம். எங்கள் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர். பீரோவில் இருந்த 1.50 லட்சம் பணம், 2 தங்க கம்மல் ஆகியவைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். தவெக காட்சியை சேர்ந்தவர்கள் என்றும் எங்களை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டினார்கள்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தவெக ஆட்சிக்கு வந்த பின் கோவை சூலூரில் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். கோவை மதுக்கரை காட்டுப்பகுதியில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். மேலும், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நடுரோட்டில் மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து தவெக நிர்வாகி மகன் பலாத்காரம் செய்ய முயன்றது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* மாணவி புகார் கொடுத்தும் உதவாத சிங்கப்பெண் படை
சம்பவம் நடந்ததும் கல்லூரி மாணவி சிங்கப்பெண் படைக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உதவி செய்யாமல் அந்த போலீஸ் நிலையம் செல்லுங்கள், இந்த போலீஸ் நிலையம் செல்லுங்கள் என்று போனிலேயே பதில் அளித்தனர். இதனால், பெண்களுக்கான அரசு என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று மாணவி வேதனையை தெரிவித்தார்.

Related Stories: