திருமங்கலம்: மதுரை அருகே திமுக பிரமுகர் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இலுப்பன்குளத்தை சேர்ந்தவர் கலாநிதி (33). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். குராயூரில் வசித்து வந்த இவர், மதுரை தெற்கு மாவட்ட திமுக முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர், முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கள்ளிக்குடியில் இருந்து குராயூருக்கு டூவீலரில் சென்றார்.
இவருடன் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், குட்டிபுலி (எ) ஹரிகரன் ஆகியோர் மற்றொரு டூவீலரில் சென்றனர்.\ கள்ளிக்குடி – காரியாபட்டி ரோட்டில் சோளம்பட்டி விலக்கு அய்யனார் கோயில் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென கலாநிதி சென்ற டூவீலர் மீது வேகமாக வந்து மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கலாநிதி மற்றும் அவருடன் வந்தவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
தப்பியோட முயன்ற கலாநிதியை ஓட, ஓட விரட்டிச் சென்று முகம், கை, கால்களில் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த கலாநிதி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அஜித்குமார் தப்பியோடி அருகேயிருந்த முட்புதரில் ஒளிந்து கொண்டார். ஹரிகரனும் தப்பியோடி விட்டார். இதனை தொடர்ந்து அந்த மர்மக்கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலாநிதியின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைகளில் வெட்டுக் காயத்துடன் புதரில் மறைந்திருந்த அஜித்குமாரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக கலாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுநடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர், பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் அவரது உடலை குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்.
