மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட கூடாது: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் இடைக்கால விவரங்கள் அல்லது பிற தரவுகளை வெளியிடக் கூடாது என இந்திய பதிவாளர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக, முதல்கட்டமாக வீடுகள் மற்றும் குடியிருப்புகள் கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறுகிறது. பல மாநிலங்களில் இப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய பதிவாளர் ஜெனரலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்ஜய் குமார் நாராயண், அனைத்து மக்கள்தொகை செயல்பாட்டு இயக்குநரகத்திற்கு அனுப்பிய அறிக்கையில், ‘‘கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் இடைக்கால மக்கள்தொகை விவரங்கள் அல்லது பிற தரவுகளை ஒன்றிய அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊடகங்களுக்கோ அல்லது வேறு எந்த அதிகார அமைப்பிற்கோ வெளியிடக் கூடாது.

1948ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, இந்த தகவல்கள் அனைத்தும் ரகசியமானவை. விதிமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார். இந்த கணக்கெடுப்பு பெரும்பாலும் மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் மட்டும் காகிதப் படிவங்கள் பயன்படுத்தப்படும்.

Related Stories: