புதுடெல்லி: வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் ஓராண்டுக்கு, அதாவது அடுத்த ஆண்டு ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனா விவகாரங்களில் நிபுணராகக் கருதப்படும் விக்ரம் மிஸ்ரி, 2024 ஜூன் மாதம் ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு அவருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை விதி 56(டி)யின் கீழ், 2026 ஜூலை 14க்குப் பிறகு மேலும் ஓராண்டு காலத்திற்கு, அதாவது 2027 ஜூலை 14 வரை, அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர், வெளியுறவுத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், உளவுத்துறையின் இயக்குனர், ‘ரா’ அமைப்பின் செயலாளர் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு, 60 வயது ஓய்வு வயதைக் கடந்தும் பணியில் நீட்டிப்பு வழங்குவதற்கான ஏற்பாடு இந்த விதியில் உள்ளது.
1989ஆம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான விக்ரம் மிஸ்ரி, வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்தர் குமார் குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி ஆகிய மூன்று பிரதமர்களிடம் தனிச் செயலாளராகப் பணியாற்றிய அரிதான சிறப்பம்சத்தை அவர் கொண்டுள்ளார். துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2019 முதல் 2021 வரை சீனாவிற்கான இந்தியத் தூதராக மிஸ்ரி பணியாற்றினார்.
2020 ஜூன் மாதல் எல்லைப்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் விக்ரம் மிஸ்ரி முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது. ஸ்பெயின் (2014-2016) மற்றும் மியான்மர் (2016-2018) நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும் அவர் பணியாற்றியுள்ளார்; மேலும் பாகிஸ்தான், அமெரிக்கா, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல இந்தியத் தூதரகங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
* அறிவியல், தொழில்நுட்பத் துறை செயலாளராக பெங்களூரூ இயற்பியல் பேராசிரியர் நியமனம்
மூத்த இயற்பியலாளரான பேராசிரியர் உமேஷ் வி. வாக்மரே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். வாக்மரே தற்போது பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கோட்பாட்டு அறிவியல் பிரிவின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பதவியேற்கும் நாளிலிருந்து அவருக்கு 60 வயது பூர்த்தியாகும் நாள் வரை அப்பதவியில் அவரை நியமிப்பதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகப் பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு தெரிவிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அப்பதவியில் இருந்த பேராசிரியர் அபய் கரண்டிகர் நிதி ஆயோக் உறுப்பினராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பதவி காலியானது.
