ஐ4சி இணையதளத்தில் வழங்கப்படும் சைபர் பாதுகாப்பு சான்றிதழை மாணவர்கள் பெற ஊக்குவித்தல்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு

புதுடெல்லி: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை இரண்டரை மணி நேர சைபர் ஹைஜின் சான்றிதழ் படிப்பில் சேர ஊக்குவிக்குமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தி உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால், பல்வேறு இணைய குற்றங்கள் நடந்து வரும் நிலையில், அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஐ4சி எனும் ஒருங்கிணைந்த சைபர் குற்ற தடுப்பு மையத்தை உருவாக்கி உள்ளது.

இதற்கான ஐ4சி இணையதளத்தில் இணைய குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்வதற்கான விழிப்புணர்வு பாடங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குழந்தைகள் அதிகளவில் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி வருவதால் அவர்கள் தவறான வழியில் வழிநடத்துதல், அடையாளத் திருட்டு, இணைய வழி துன்புறுத்துதல் மற்றும் நிதி சார்ந்த இணைய மோசடி உள்ளிட்ட இணைய வழி அபாயங்களுக்கு உள்ளாவதை தடுக்க மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைய பாதுகாப்பு அடிப்படை அறிவை பெறுவதற்கான சைபர் ஹைஜின் சான்றிதழ் பெற ஊக்கப்படுத்துமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான இரண்டரை மணி நேர படிப்பை முடித்ததும், மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இது வேலைவாய்ப்புகளில் அடிப்படை சைபர் பாதுகாப்பு அறிவை காட்டவும் உதவும். இதுதவிர, ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை சைபர் விழிப்புணர்வு தினமாக கடைபிடித்து வினாடிவினாக்கள், பேச்சு, சுவரொட்டி தயாரிக்கும் போட்டிகள், உறுதிமொழி இயக்கங்கள், விவாதங்கள் நடத்தவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: