அம்பாலா: அரியானாவில் 220 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழந்தான். அரியானா அம்பாலா மாவட்டம் தனவ்ரா கிராமத்தை சேர்ந்தவர் கர்னைல் சிங். நேற்று முன்தினம் அதிகாலை கர்னைல் சிங் வயலுக்கு சென்றார். அவரது மகன் மஞ்சித்சிங் அவருக்கு உணவு கொண்டு சென்றார். அப்போது மஞ்சித் தனது குழந்தை நிர்வைரை(4) உடன் அழைத்துச்சென்றுள்ளார். வயலில் நிர்வைர் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். திடீரென அங்கு திறந்த நிலையில் இருந்த 220 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
தொடர்ந்து சிறுவனின் தந்தை, தாத்தா மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தையை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறப்பு உபகரணங்களுடன் மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 21 மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று அதிகாலை 3.40 மணியளவில் குழந்தையை மீட்டனர்.
உடனடியாக குழந்தையை டாக்டர் பரிசோதித்தார். சுயநினைவு இல்லாததால் குழந்தையை அம்பாலா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆழ ஆழ்துளை கிணற்றை மூடாமல் வைத்திருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு துணை கமிஷனர் அஜய் சிங் தோமர் உத்தரவிட்டுள்ளார்.
