மராமத்து பணி செய்யாமல் குளமாக மாறிய தார்ச்சாலை

 

காளையார்கோவில், ஜூலை 1: காளையார்கோவில் அருகில் உள்ள மூர்த்தி நகர், சோமசுந்தரநகர் செல்லும் தார் ரோடு சிறு மழைக்கே சேரும் சகதியுமாக மாறி விட்டதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். காளையார்கோவில் அருகில் காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் தியேட்டர் எதிர்புரம் மூர்த்தி நகர், சோமசுந்தர நகருக்கு செல்லும் தார்ரோடு சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னால் போடப்பட்டது. தற்போது தார் இருந்த இடமே தெரியாமல் ஜல்லிகள் மட்டுமே தெரிகின்றன. இந்த சாலையை மூர்த்தி நகர் மற்றும் சோமசுந்தர நகரிலிருந்து 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 10 மீட்டருக்கு ஒரு இடத்தில் ரோடு கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த சிறு தூரலுக்கே ரோட்டை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறி விடுகின்றது.

அப்பகுதிக்கு செல்லும் ஸ்கூல் வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்களைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. நேற்று இரண்டு சிறுவர்கள் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதை கடந்து செல்லும் பொழுது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. மேலும் நடந்து செல்பவர்களின் பாதங்களை ஜல்லி கற்கள் பதம் பார்த்து விடுகின்றன. அவசரக் காலங்களில் பயன்படுத்தவே முடியாத சாலையாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரமான தார்ச் சாலை அமைத்துத் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் வெயில் காலங்களில் ஜல்லிகற்கள் நிறைந்து பள்ளமேடுகளாக பாதங்களை பதம் பார்த்து விடுகின்றது. மழை காலங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சகதியாக மாறி வழுக்கி விடுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை, இது வரையிலும் எந்த மராமத்து பணிகளும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

Related Stories: