காரை வழிமறித்து வாலிபர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: 3 பேர் கைது: வீடியோ வைரல்

 

பண்ருட்டி, ஜூலை 1: காரை வழிமறித்து வாலிபர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர்(22), ரமேஷ்(27), விக்னேஷ்(24). இவர்கள் கடந்த 28ம் தேதி வான்பாக்கம் பகுதியில் உள்ள பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கீழ்மாம்பட்டை சேர்ந்த சூர்யா(20), கவுதம்(20), மோகன்(20) ஆகிய 3 பேரும் நீங்க என்ன ஊர்? எனக் கேட்டதில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் முறைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழகம் அருகே காரில் அலெக்சாண்டர் உள்பட 3 பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த சூர்யா, கவுதம், மோகன் ஆகியோர் காரை வழிமறித்து, 3 பேரையும் காரில் இருந்து இறக்கி ஆபாசமாக திட்டி, கையாலும், அருகில் கிடந்த உடைந்த சிமெண்ட் கல்லை எடுத்தும் தாக்கியுள்ளனர். மேலும் இதே கல்லால் அடித்து கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அலெக்சாண்டர் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், (பொறுப்பு) சப்-இன்ஸ்பெக்டர் திவாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூர்யா, கவுதம், மோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலைவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: