மீண்டும் மதமாற்ற தடைசட்டமா? பாஜ அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக: திமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் கடும் கண்டனம்

 

சென்னை: மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?. பாஜ அஜெண்டாவுக்கு பாஜ வேலை பார்ப்பதாக திமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ.சுபேர்கான் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் நீண்டநெடிய சமூகநீதி வரலாற்றில், ஒருவரின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்னடைவை அடிப்படையாகக் கொண்டே உரிமைகள் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளன. கலைஞர் இஸ்லாமியர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதும் அந்த போராட்ட வரலாற்றின் தொடர்ச்சிதான். ஆனால், இன்று தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளாலும், சட்ட ரீதியான அலட்சியத்தாலும் அந்த அடிப்படை தகர்க்கப்பட்டு, சிறுபான்மையினரின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்துக்கு மதம் மாறிய நபர், பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு தொடர்ந்த வழக்கில், இஸ்லாமை தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும் அரசாணையை மதுரை கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, சமூகநீதிப் போரில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகும். இந்த தீர்ப்பின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களையும், தவெக அரசு காட்டிய மெத்தனப்போக்கையும் பார்க்கும்போது, இது மறைமுகமாக பாஜவின் ‘மதமாற்ற தடைச்சட்ட’ அஜெண்டாவுக்கு துணைபோகிறதோ என்று பலமான சந்தேகம் எழுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிக்கல் 25 ஒரு குடிமகன் தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் முழு சுதந்திரம் அளிக்கிறது. ஆனால், தற்போதைய தீர்ப்பில், “இஸ்லாமிற்கு மாறிய ஒருவர் வெறும் முஸ்லிம் மட்டுமே, அவருக்குப் பழைய சாதி அடையாளம் கிடையாது” என்று இட ஒதுக்கீட்டை மறுத்திருப்பது தேன் தடவிய நஞ்சாகவே இருக்கிறது. மதம் மாறுவதால் ஒருவரின் ஆன்மிக நம்பிக்கை மாறலாம்; ஆனால் அவர் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த சமூகப் புறக்கணிப்பும், கல்விப் பின்னடைவும் ஒரு நாளில் மறைந்துவிடாது. இந்த அடிப்படை உண்மையை நீதிமன்றத்தில் நிலைநிறுத்த தவெக அரசு தவறிவிட்டது. இந்தச் சட்டப் பின்னடைவு ஒரு அபாயகரமான அரசியல் மாற்றத்தின் அறிகுறியாகும்.

இப்போது ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பின் விளைவாக, மதம் மாறினால் இட ஒதுக்கீடு பறிப்பு என்ற தண்டனை என்ற அச்சுறுத்தலின் மூலம், அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தைப் பறிக்கும் பாஜவின் மறைமுக மதமாற்ற தடைச்சட்டத் திட்டத்திற்கு தவெக அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது என்பது தெளிவாகிறது. அந்த அஜெண்டாக்களுக்கு இணக்கமான முதல்வரின் அரசு, இணக்கமான சட்டத்துறை அமைச்சர் என தவெக அரசு பாஜவுடன் பேணும் இணக்கம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘கட்டாய மதமாற்ற தடைசட்டம்’ என்ற வகுப்புவாத சட்டத்தை கொண்டு வந்த போது, திமுக முன்னணியில் நின்று போராடி அந்த சட்டத்தை முறியடித்தது. தற்போது வந்திருக்கிற நெருக்கடியிலும், திமுக, கலைஞரின் வழி நின்று நம் உரிமைகளை தாரைவார்க்கும் தவெக அரசின் கள்ளத்தனமான கூட்டணியையும் அம்பலப்படுத்தி, சமூகநீதியை நிலைநாட்டி. உரிமைகளை மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: