நம்பியவர்களை நட்டாற்றில் விட்ட ராமதாஸ்: சேலம் மாஜி பாமக எம்எல்ஏ வேதனை

 

சேலம்: பாமக நிறுவனர் ராமதாசை தலைவராக கொண்டு இயங்கி வந்த நிர்வாகிகள் கூட்டம் சேலம் அஸ்தம்பட்டியில் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ‘‘தனது 61வது மணநாளில் அன்புமணியை வரவழைத்து அவரோடு ராமதாஸ் சமரசம் செய்துள்ளார். இருவரும் இணைந்த நிலையில் ராமதாசை நம்பி ஒன்றரை ஆண்டு காலம் பயணித்த மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்கள் சென்னையில் ஒன்று கூடி அடுத்த கட்ட முடிவெடுக்க வேண்டும்,’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து அருள் அளித்த பேட்டியில், தந்தை, மகன் இணைப்பு ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்திருந்தால் பாமக அங்கீகாரம் பெற்று இருக்கும். துணை முதல்வராகி இருப்போம். 10 முதல் 15 சட்டமன்ற உறுப்பினர்களை கூடுதலாக பெற்று இருப்போம். வாக்கு சதவீதம் இரண்டு சதவீதம் குறைந்தும் இருக்காது. அதனால் வேதனை, வருத்தம், வலி உள்ளது.

என்னைபோல் உள்ளவர்களுக்கு பல கோடி கடன் ஏற்பட்டு இருக்காது. என்னை கொலை செய்ய பார்த்து இருக்கமாட்டாங்க. தற்போது எங்களை நட்டாற்றில் விட்டது போல் எண்ணுகிறோம். அதனால் பயமும், வேதனையும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ராமதாசை சந்திக்க உள்ளீர்களா என்று கேட்டதற்கு,‘‘கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தை கேட்டு 2நாட்களில் முடிவு செய்வோம்,’’ என்றார்.

Related Stories: