தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு; காதலியை கொன்று எரித்த வாலிபர் தாயுடன் ஏரியில் குதித்து தற்கொலை: திசை திருப்ப நிலப்பிரச்னை என கடிதம்

 

தேன்கனிக்கோட்டை: பெங்களூருவில் காதலியை கொலை செய்து உடலை எரித்து வீசிய காதலன், தேன்கனிக்கோட்டைக்கு வந்து தாயுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பன் மகன் ராஜசேகர் (30). இவர் கெலமங்கலம் அடுத்த சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகே, ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ருத்ரப்பா என்பவருக்கும் இடையே வழித்தட பிரச்னை உள்ளது.

இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு, ராஜசேகர் மற்றும் அவரது தாய் மஞ்சுளா(56) ஆகியோர், ஜெராக்ஸ் கடையின் கட்டிட உரிமையாளர் ராஜேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று, வீட்டின் அருகே வழிவிடாமல் ருத்ரப்பா குடும்பத்தினர் பிரச்னை செய்து வருவதாக கூறியுள்ளனர். அதற்கு ராஜேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் ராஜசேகர் ஒரு கடிதம் எழுதி, அதனை ராஜேஷ்குமார் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அதில், `நானும், எனது தாய் மஞ்சுளாவும் தற்கொலை செய்து கொள்ள உள்ளோம். இதற்கு காரணமான பக்கத்து வீட்டை சேர்ந்த ருத்ரப்பா, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், என் தாயையும், என்னையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும்,’ என தெரிவித்திருந்தார். பின்னர், கடிதம் மற்றும் செல்போனை காரில் வைத்து விட்டு, தண்டரை ஏரியில் தாயுடன் சேர்த்து துணியில் கட்டி கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். செல்போனில் வந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார் மற்றும் நண்பர்கள், உடனடியாக கொலமங்கலம் காவல் நிலையம் சென்று, தங்களுக்கு வாட்ஸ்அப்பில் வந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, போலீசார் ராஜசேகரின் செல்போன் டவர் லொகேசனை வைத்து தேடிச் சென்ற போது, அது தேன்கனிக்கோட்டை தண்டரை ஏரி என காட்டியது. பின்னர், அதிகாலையில் தேன்கனிக்கோட்டை போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தண்டரை ஏரியில் ராஜசேகர், மஞ்சுளா ஆகியோரது சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில்திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ராஜசேகர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆடுகோடி பகுதியை சேர்ந்த நளினி (30) என்பவரை காதலித்துள்ளார். பெற்றோரை இழந்த நளினி ஹாஸ்டலில் தங்கி, பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், பெலகாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கு நளினியை அழைத்துச் சென்ற ராஜசேகர், அவரை கொலை செய்து உடலை எரித்து விட்டு வந்து விட்டார்.

இதுகுறித்து கர்நாடக போலீசார் நளினியின் செல்போன் அழைப்புகளை வைத்து, ராஜசேகரின் செல்போன் நம்பரை கண்டறிந்து நேற்று முன்தினம் அவருக்கு போன் செய்து, `உங்கள் கார் மண்டியா மாவட்டம், டோல்கேட் பகுதியில் சென்றுள்ளது. அந்த இடத்தில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களிடம் விசாரிக்க வேண்டும்,’ எனக் கூறியுள்ளனர். இதனால், பதற்றமடைந்த ராஜசேகர், கொலை வழக்கில் மாட்டிக் கொள்வோம் என பயந்து, இப்பிரச்னையை திசை திருப்புவதற்காக, நிலப்பிரச்னையில் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், ருத்ரப்பா குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி கடிதம் எழுதி வைத்து, தாயுடன் சேர்ந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தகவலறிந்து வந்த கர்நாடகா போலீசார், காதலியான நளினியை எதற்காக ராஜசேகர் கொலை செய்தார்? என விசாரிக்க முடியாமல், அவரது ஜெராக்ஸ் கடை, வீட்டில் ஆதாரங்கள் ஏதாவது உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

Related Stories: