சென்னை: தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள், சுயநிதி மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகள், மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சுயநிதி மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கான நிர்வாக மற்றும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் முன்கூட்டியே தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்திய பிறகு, தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
