ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், வீட்டில் தூங்கிய ஐந்து வயதுச் சிறுமி, கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அவரது அத்தையே கொன்று வீசிய அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. மதுரை பைகாரா முத்துராமலிங்கபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் பாலகணேஷ். இவரது மனைவி கார்த்திகைச்செல்வி (39). இவர்களுக்கு சாய் தீப்தி (5), சாரு நித்திகா (5) இரட்டைக் குழந்தைகள். கடந்த சனிக்கிழமை கார்த்திகைச்செல்வி, ராமநாதபுரம் எம்எஸ்கே நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மகள்களுடன் வந்தார். இரவில் குழந்தைகள் மற்றும் தம்பிகளான முத்துப்பாண்டி, அஜித், அவரது மனைவி சபரிகா (21) உள்ளிட்ட உறவினர்களுடன் வீட்டில் தூங்கினார்.
மறுநாள் (நேற்று முன்தினம்) அதிகாலை எழுந்த கார்த்திகைச்செல்வி, மகள் சாய் தீப்தியை காணாததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பஜார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அருகே உள்ள கிணற்றில் இருந்து சிறுமியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் சிறுமியின் அத்தை சபரிகாவுக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ‘‘கார்த்திகைச்செல்வியின் தம்பி அஜித், கடந்தாண்டு உறவினரான சபரிகாவை (21) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாதத்தில் மாற்றுத்திறன் பெண் குழந்தை உள்ளது. காதலித்து திருமணம் முடித்தவர் என்பதால் சபரிகா நகை, சீர்வரிசை கொண்டு வரவில்லை என உறவினர்கள் ஏளனமாக பேசி வந்தனர். மேலும் அவரது குழந்தையையும் மாமனார், மாமியார் கவனிக்கவில்லை. கார்த்திகைச்செல்வியின் மகள்கள் மீது மட்டும் அதிக அக்கறை காட்டினர். இதனால் ஆத்திரத்தில் இருந்த சபரிகா, சம்பவத்தன்று இரவு சிறுமி சாய் தீப்தியை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்’’ என தெரிவித்தனர்.
