திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

 

திருச்செந்தூர், ஜூன் 29:விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் தொடர் விடுமுறையில் குவிந்த பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் திருவிழாக்களுக்கு இணையாக அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கடந்த 26ம்தேதி மொகரம் அரசு விடுமுறை, நேற்று முன்
தினம் சனிக்கிழமை, நேற்று ஞாயிற்றுக்கிழமை என 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடந்த 3 தினங்களில் குவிந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே
திரளான பக்தர்கள் இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயிலில் கூட்டம் அதிகளவில் இருந்தது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் அருணாசலம், துணை ஆணையர் யக்ஞ நாராயணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

காவடி எடுத்து வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய விழாக்களான கந்தசஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சுவாமிக்கு காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துடுவார்கள். அதேபோல் முக்கிய விழா நாட்களில் வர இயலாத பக்தர்கள் தொடர் விடுமுறை நாட்களில் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதேபோல் நேற்று முன்தினம் ஆனி வருஷாபிஷேகத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். நேற்றும் பக்தர்கள் காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

 

Related Stories: