முந்தி செல்ல முயன்றபோது விபத்து: பஸ்கள் கவிழ்ந்து 48 பயணிகள் காயம்

 

மானாமதுரை, ஜூன் 29: மானாமதுரை அருகே தனியார் பஸ்கள் முந்தி செல்ல முயன்றபோது கவிழ்ந்ததில், 48 பயணிகள் காயம் அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரைக்கு 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று மாலை 4.45 மணிக்கு இரண்டு தனியார் பஸ்கள் அடுத்தடுத்து புறப்பட்டன. இந்த இரண்டு பஸ்களுக்கும் சில நிமிட இடைவெளியில் புறப்பட்டதால், பயணிகளை ஏற்றுவதில் அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டு. நேற்றும் பரமக்குடியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இரு பஸ்களும் அசுர வேகத்தில் சென்றன.

இதனால் பயணிகள் அச்சத்துடன் அமர்ந்து இருந்த நிலையில், மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமம் அருகே மேம்பாலத்திற்கு முன்பாக பஸ்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது இரண்டு பஸ்களும் முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பஸ்களும் கவிழ்ந்தன. இதில் இரண்டு பஸ்களில் இருந்த 48 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த 20 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறு காயங்கள் அடைந்தவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

 

Related Stories: