குறைந்த விலைக்கு கார் வாங்கி தருவதாக கூறி ரூ.3.69 லட்சம் மோசடி: நெல்லை தம்பதி மீது வழக்கு

 

புதுச்சேரி, ஜூன் 26: புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் ராஜகுமார். இவரது மனைவி ஷாலினி. இவர்களது வீட்டின் பக்கத்து வீட்டில் திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(எ) சையத் முகமது புகாரி, இவரது மனைவி கங்காதேவி ஆகியோர் வசித்து வந்தனர். அவர்கள் ஷாலினியிடம் நெருங்கி பழகி வந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷாலினியிடம் புதிய கார் ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதனை நம்பிய ஷாலினி ரூ. 3 லட்சத்து 69 ஆயிரத்து 800ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர்கள் கார் வாங்கி தரவில்லை. இது குறித்து கேட்டபோது எந்த பதிலும் தராமல் இருந்துள்ளனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஷாலினி, இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மணிகண்டன் மற்றும் கங்காதேவி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், புதுச்சேரி சத்தியா நகரை சேர்ந்த தொழிலதிபரான திருப்பதி (51) என்பவரிடம் மணிகண்டன், கங்காதேவி ஆகியோர் தங்கத்தில் முதலீடு என ஆசை வார்த்தை கூறி ரூ.13.75 லட்சம் மோசடி செய்துள்ளனர். இது குறித்து திருப்பதி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் மணிகண்டன் மற்றும் கங்காதேவி ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். இதற்கிடையே டிராவல்ஸ் உரிமையாளரிடம் பணமோசடி செய்த வழக்கில் மணிகண்டன் மற்றும் கங்காதேவியை சிபிசிஐடி போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: