கேடிசி நகர், ஜூன் 26: கோவில்பட்டி அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டி பாரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (48). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 21ம் தேதி கோவில்பட்டி சுபா நகரில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சக்திவேல் நின்றிருந்த இரும்பு சாரம் எதிர்பாராதவிதமாக சரிந்துள்ளது. இதில் சக்திவேல் நிலை தடுமாறி மேலிருந்து கீழே தரையில் விழுந்து பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சக்திவேல் இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
