*சகோதரர்கள் கைது
ஏற்காடு : சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா தலைச்சோலை கிராமம் பாசிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (37), விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது அண்ணன் செல்வகுமார் (40) என்பவருக்கும் இடையே, நீண்டநாட்களாக நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 15ம் தேதி இரவு, இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், செல்வகுமார் மற்றும் அவரது மகன்கள் அமர்நாத் (27), தினேஷ்குமார் (23) ஆகிய மூவரும் சேர்ந்து, முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த முருகன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, ஏற்காடு போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.
மேலும், தலைமறைவாக இருந்த செல்வகுமாரின் மகன்கள் அமர்நாத், தினேஷ்குமார் ஆகிய இருவரையும், நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவர்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வகுமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
