ஆனைமலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெண் குழந்தையை கொன்ற கொடூர தாய்க்கு ஆயுள்

*கோவை கோர்ட் தீர்ப்பு

கோவை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெண் குழந்தையை கொன்ற கொடூர தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பளித்தது. கோவை அடுத்த ஆனைமலை தம்மம்பதி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2017ம் ஆண்டு சேத்துமடையை சேர்ந்த சரோஜினி (27) என்பவரை காதல் திருமணம் செய்தார். ஒன்றரை ஆண்டுகள் கழித்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால், கோபித்து கொண்டு சரோஜினி சேத்துமடையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மணிகண்டனும் அங்கு சென்று மாமனார் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சரோஜினி அங்கு வாய்க்கால் பராமரிப்பு வேலைக்கு தினக்கூலியாக சென்றார். அப்போது அவருக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்தனர். இவர்களின் தகாத உறவு மணிகண்டனுக்கு தெரியவந்தது.

அவர் தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும், சரோஜினி கள்ளக்காதலை கைவிடவில்லை. தொடர்ந்து வந்தார். இதனால், வேதனையடைந்த மணிகண்டன் தம்மம்பதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து விட்டார். இதனையடுத்து கடந்த 12-08-2021ம் ஆண்டு மணிகண்டனின் பெற்றோர் சேத்துமடை சென்று சமாதானம் பேசி தனது மருமகளையும், பேத்தியையும் தம்மம்பதிக்கு அழைத்து வந்தனர்.

இருப்பினும், மீண்டும் கணவன் – மனைவியிடையே சண்டை ஏற்பட்டது. இதனால், விரக்தியடைந்த சரோஜினி கள்ளக்காதலை தொடர்வதற்கும், கள்ளக்காதலனோடு செல்வதற்கும் தனது குழந்தை இடையூறாக இருப்பதாக கருதி குழந்தையை கொல்ல சதி திட்டம் தீட்டி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-08-2021ம் தேதி மணிகண்டன் வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த சரோஜினி, வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை வீட்டுக்குள் எடுத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், குழந்தை மயக்கமடைந்து விட்டது என கூறி மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
தீவிர விசாரணையில், பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொலை வழக்கில் ஆனைமலை போலீசார், சரோஜினியை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில், குழந்தையை கொலை செய்த தாய் சரோஜினிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமார் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன் பிரபு ஆஜரானார்.

Related Stories: