கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை

*மேலும் 4 வீடுகளில் திருட்டு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வீடுகளில் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(72). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை எழுந்தவர், வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த மற்றொரு அறையை பார்த்தபோது, அதில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் அருண்குமார் (29), என்பவர் அவருடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் மாடி வழியாக வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

அதே போல் சிவப்பிரகாசம்(50), என்பவர் வீட்டிலும் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது மேல்மாடி கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். வீட்டில் பணமோ நகையோ எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதே போல ஜெயராமன்(65) என்பவரது வீட்டிலும் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மேல்மாடி வழியாக வீட்டிற்குள் நுழைந்து கதவை உடைத்து பீரோவை உடைத்து அதிலிருந்து 2 கிராம் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதே போல ஜெயக்குமார்(36) என்பவர் வீட்டில் இல்லாததால் அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும், கடலூரிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் தடயங்களை சேகரித்தனர். ஒரே நாளில் 4 வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: