தென்னந்தோப்பில் நுழைந்த யானையை போராடி விரட்டிய வனத்துறை

 

சத்தியமங்கலம்: தாளவாடியில் காட்டிலிருந்து வெளியேறி தென்னந்தோப்பில் நுழைந்த யானையை வனத்துறையினர் போராடி விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் நடமாடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (புதன்) அதிகாலை ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சிமிட்டஹள்ளியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் என்பவரது தென்னந்தோப்பிற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

விவசாயிகள் மூலம் இத்தகவலறிந்த ஜீரஹள்ளி வனத்துறையினர் சம்பவ இடம் வந்து டார்ச் லைட் அடித்து சத்தம் போட்டும் விவசாயிகள் உதவியுடன் 2 மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை அடிக்கடி சேதப்படுத்துவதால் தாளவாடி பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: