காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதிய பராமரிப்பு இல்லை; ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குடிநீர் தட்டுப்பாடு

 

* குழாய்களில் கசியும் நீரை பிடிக்க காத்திருப்பு
* தள்ளுவண்டிகளுக்கு மவுசு அதிகரிப்பு

ராமநாதபுரம்: காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முறையாக பராமரிக்காததால் ராமநாதபுரம் மாவ்ட்டத்தில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கியுள்ளது. காலிக்குடங்களுடன் குடிநீருக்கு பெண்கள் அலையும் நிலையில், தள்ளுவண்டிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 யூனியன்களுக்கு உட்பட்ட 429 பஞ்சாயத்துகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. தொலைதூர கிராமங்களுக்கும் 2 நாட்களுக்கு ஒருமுறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த முறை, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலத்திலும் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது புதிய அரசு அமைந்த ஒன்றரை மாத காலத்தில் போதிய பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் கூட்டுக்குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏழுந்துள்ளது. பிரதான குடிநீர் குழாய்கள் செல்லும் வழித்தடத்தில் உள்ள ஊர்களை தவிர்த்து தொலைதூரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, குக்கிராமங்களில் குடிநீர் செல்லவில்லை. இதனால், மாவட்டத்தில் பரவலாக குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை எழுந்துள்ளது. லாரி டேங்கரில் விற்கும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மற்றொருபுறம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் கசியும் நீரை மணிக்கணக்கில் காத்திருந்து குடத்தில் பிடித்து தள்ளுவண்டியில் வைத்து பெண்கள் எடுத்து செல்கின்றனர். இதனால், தள்ளுவண்டிகளுக்கு தற்போது தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. இது குறித்து கிராம பெண்கள் கூறுகையில், `ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் தற்போது வாரம் இருமுறை தண்ணீர் வருவதே அரிதாக உள்ளது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து கசியும் தண்ணீரை மணிக்கணக்கில் காத்திருந்து பிடித்து செல்கிறோம். ஒவ்வொரு குடமாக எடுத்து செல்வதைவிட தள்ளுவண்டியில் 5 குடங்களை வைத்து தள்ளி செல்வது சுலபமாக உள்ளது.

இப்பகுதியில் திருமண விழா சீர்வரிசையில் இடம்பெறும் பொருளாகவும் தள்ளுவண்டி மாறியுள்ளது’ என்று தெரிவித்தனர். இது குறித்து சாயல்குடியை சேர்ந்த தள்ளுவண்டி தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், `முதுகுளத்தூர், சாயல்குடி, சிக்கல், கமுதி, அபிராமம், பரமக்குடி, சத்திரக்குடி, திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் தள்ளுவண்டி தயாரிக்கும் பட்டறைகள் அதிகம் உள்ளன. இங்கு கடந்த சில வாரங்களாக தள்ளுவண்டி விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு வண்டி ரூ.4 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தண்ணீர் எடுக்க மட்டுமின்றி விவசாய தேவைக்கும் இந்த வண்டி பயன்படுகிறது. ஒரு மாதத்தில் 40 முதல் 50 வண்டிகள் வரை விற்பனையாகிறது’ என்றார்.

Related Stories: