சேலம்: ஈழ தமிழர்களுக்காக போராட்டத்தை நடத்தினோம் என சட்டசபையில் முதல்வர் விஜய் கூறிய நிலையில், அவர் ஈழதமிழர்களுக்காக கையெழுத்துக்கூடபோட மறுத்தவர் என அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு பேசிய பழைய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டசபையில் முதல்வர் விஜய் நேற்று பேசுகையில், 2008ம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை செய்தோம் என்றார். ஆனால் இது ஒரு பொய்யான தகவல் என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசுவே உதாரணமாக இருக்கிறார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த நேரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகியும், தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவருமான வன்னியரசு, நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்க செல்கிறார். அப்போது கையெழுத்து போட விஜய் மறுத்துவிட்டார்.இதுதொடர்பாக வன்னியரசு கூறுகையில், ராஜபக்சேவுக்கு எதிராக ஐ.நா. சபையில் சமர்ப்பிப்பதற்காக நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்க அவரது படப்பிடிப்பு தளத்திற்கு சென்றோம். ஆனால் அவர் அதில் தனக்கு விருப்பம் இல்லை என கூறி கையெழுத்து போட மறுத்ததுடன் திருப்பி அனுப்பி விட்டார்.
அவரது தந்தை சந்திரசேகரை தொடர்பு கொண்டு, இனப்படுகொலை செய்த குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட வேண்டும் என கேட்டபோது, அவரது தந்தையும் மறுத்துவிட்டார். இவ்வாறு வன்னியரசு பேசிய பழைய பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதன்மூலம் நடிகரும் முதல்வருமான விஜய் சொல்வது எல்லாமே பொய்யாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
