ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் லேண்டானா களைச்செடிகள் அகற்றிய பின்பு வனவிலங்குகள் நடமாட்டம் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் அந்நிய நாட்டு தாவரமான லேண்டானா களைச்செடிகள், பார்த்தீனியம் உட்பட பல்வேறு தாவரங்கள் அதிகளவு வளர்ந்து காணப்பட்டது. இதில் லேண்டானா களைச்செடிகள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்தது. இச்செடிகள் அதிகம் வளர்ந்து உள்ள நிலையில் வனவிலங்குகளுக்கு தேவையான புற்கள் மற்றும் இயற்கை உணவு கிடைக்காமல் போனது. இதனால் வனவிலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயரவும் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் செல்லவும் துவங்கின.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இச்செடிகளை அகற்றவும் அதே சமயம் அதனை பயனுள்ளதாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இந்த லேண்டானா களைச்செடிகளை அகற்றி அந்த தாவரங்களை பதப்படுத்தி பின்னர் எரிபொருளாக (பிரிக்கெட்டுகள்) மாற்றப்பட்டு வருகிறது. இந்த எரிபொருட்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 120 மெட்ரிக் டன் எரிபொருட்கள் முதுமலையில் உற்பத்தி செய்யப்பட்டு தொழிற்சாலைகளுக்கு கடந்த பல மாதங்களாக வழங்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தற்போது களைச்செடிகள் அகற்றப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் தாராளமாக அனைத்து பகுதிகளிலும் வலம் வருகின்றன. மான், யானை உட்பட பல்வேறு விலங்குகளுக்கு தேவையான புற்கள் மற்றும் தாவரங்கள் தற்போது உணவாக கிடைக்கின்றன. இதனால் வனவிலங்குகள் தற்போது சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக வர துவங்கியுள்ளன. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்குள் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த வனவிலங்குகள் கண்ணில்பட துவங்கியுள்ளன. இந்த வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
