போச்சம்பள்ளியில் கனகாம்பரம் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.600க்கு விற்பதால் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி, ஜூன் 24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பரவலாக மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். போச்சம்பள்ளியில் கடந்த மாதம் கனகாரம்பரம் பூக்கள் உற்பத்தி அதிகரித்து சந்தைக்கு வரத்து பல மடங்கு அதிகரித்ததால் விலை சரிந்தது, ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் வேறு வழியின்றி, அதை பறித்து மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்தனர். விவசாய பணிக்கு கூலி தொழிலாளர்கள் கிடைப்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. மலர் சாகுபடியில் பூக்களை தினமும் காலையில் பறித்து உடனே மார்க்கெட்டுக்கு அனுப்பவேண்டிய நிலை உள்ளது. ஆனால், போதுமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கிடைக்காதது, ஒருபுறம் விலை இல்லாத மற்றொரு புறம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால், மலர்களை பறிக்காமல் செடியிலேயே விட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இல்லாவிட்டால் குடும்ப உறுப்பினர்களை கொண்டு மலர்களை பறித்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த சூழ்நிலை எல்லோருக்கும் சாதமாக இருப்பதில்லை. இதற்கு தினமும் அதிகாலையில் வந்து வேலையை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

இதனால் விவசாய கூலி வேலைக்கு வருவதற்கு பலரும் விரும்புவதில்லை. இதனால் கனகாரம்பரம் சாகுபடி பரப்பை விவசாயிகள் குறைத்துக்கொண்டனர். இந்நிலையில் திருமணம், திருவிழா சீசன் துவங்கியுள்ளதால் கனகாம்பரம் பூக்களின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. இதனால் நேற்று ஒரு கிலோ கனகாம்பரம் பூ ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் விலை உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சந்தம்பட்டியை சேர்ந்த பூ விவசாயி சக்திவேல் கூறுகையில், ‘கனகாம்பரத்துக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால் பூக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதே நேரம் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களுக்கான தேவை குறைந்ததுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பூக்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டியது கட்டாயம். ஓசூர் மார்க்கெட்டுக்கு கடந்த மாதம் கனகாம்பரம் பூக்கள் வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது.

சாகுபடிக்கான உரம், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் தினசரி பூக்களை பறிக்க ஆட்கள் கூலி செலவு அதிகரித்துள்ளது. தற்போது தேவை அதிகரித்து கனகாம்பரம் விலை உயர்ந்து வருகிறது. மார்க்கெட்டில் கிலோ ரூ.600க்கு விற்பனையானது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்ட வியாபாரிகள் நேரில் வந்து விவசாயிகளிடம் முன்பணம் செலுத்தி கனகாம்பரம் பூக்களை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். இதனால் ஒரளவிற்கு வருவாய் கிடைத்த நிலையில் போக்குவரத்து செலவு மிச்சம் இருப்பதால் எங்களுக்கு போதிய வருவாய் கிடைத்து
வருகிறது’ என்றனர்.

Related Stories: