கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு அணை கட்டும் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சீக்கலப்பள்ளி கிராமம் அருகே சாமல்பள்ளம், சின்னாறு ஆறுகள் தென்பெண்ணை ஆற்றுடன் வாணி ஒட்டு என்னுமிடத்தில் கலக்கிறது. இவ்விடத்தில் புதிதாக அணை கட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒட்டுப்பட்டி, காட்டூர், அகரம், பூவத்தி, ஆலப்பட்டி, மோரமடுகு, சோக்காடி, துடுகனஹள்ளி, புங்கம்பட்டி, சாப்பரம், மோரனஹள்ளி, பனகமுட்லு, குட்டப்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் எரசீகலஹள்ளி, அண்ணாமலைப்பட்டி வழியாக தும்பலஹள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, தமிழக அரசு இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
இதற்காக ஆய்வுசெய்ய நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இத்திட்டம் தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்ய அரசு, கடந்த 2016ம் ஆண்டு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த ஆய்வின் அறிக்கை குறித்த தகவல்கள் தெரிவிக்கவேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் மனு அளித்திருந்தார். இதற்கு கிருஷ்ணகிரி நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்துள்ள பதில் மனுவில், வாணி ஒட்டு புதிய அணைக்கட்டும் திட்டம் குறித்து சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்ததில், சுமார் 38 மீட்டர் உயரத்திற்கும், 470 மீட்டர் நீளத்திற்கும் சுமார் 4,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்படி 460 மில்லியன் கனஅடி நீர்தேங்கும் வகையில் நீர்தேக்கம் அமைக்க உத்தேசிக்கப்பட்டது.
நீர்த்தேக்கம் அமையபெறுவதால் 283.62 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனநிலம் மற்றும் 293.07 ஏக்கர் பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. நீர்தேக்கத்திற்கான சாத்தியக் கூறுகள் ஆராய்ந்து நீர்தேக்கத்தின் மட்ட அளவுகள் எடுத்து முடிக்கப் பட்டு, ரூ.778 கோடிக்கு முதல் நிலை சாத்தியகூறு அறிக்கை அரசின் மேல் நடவடிக்கை பெறவும் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இத்திட்டத்தை செயல்படுத்த வனநிலம் மிகுதியாக தேவைப்படுவதாலும், 50 வீடுகள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் என்பதாலும், பயன் செலவு விகிதம் ஒன்றிற்கும் குறைவாக உள்ளதால், கடந்த 2023ம் ஆண்டே அரசு இத்திட்டத்திற்கு “கைவிடல் ஆணை” வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், ‘வாணி ஒட்டு என்னுமிடத்தில் புதிய அணைக்கட்டு திட்டம் செயல்படுத்த முடியாது என்கிற அரசின் பதில் அதிர்ச்சியளிக்கிறது. இத்திட்டம் குறித்து மீண்டும் களஆய்வு மேற்கொண்டு, இரண்டு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வாணி ஒட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் ஏராளமான விவசாய நிலம் பாசன வசதியை பெறும். இதனால் பயிர் விளைச்சல் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொண்டு, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
